திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
Mickey 17 Review: காத்திர அரசியல் பேசும் சயின்ஸ் பிக்ஷன்; `பாராசைட்' இயக்குநரின் அடுத்த படைப்பு!
2054-ம் ஆண்டு நிஃப்ல்ஹெய்ம் என்ற கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற, கென்னத் மார்ஷல் (மார்க் ருஃபாலோ) என்ற தோல்வியுற்ற பணக்கார அரசியல்வாதி ஒரு திட்டத்தைத் தீட்டுகிறான். அதற்காகப் பல்வேறு துறைகளில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறான். அதில் மிக்கி பார்ன்ஸ் (ராபர்ட் பேட்டின்சன்) என்ற நபர் 'எக்ஸ்பெண்டபிள்' (Expendable) ஆகப் பணியாற்ற விரும்புகிறார். அது வேற்றுக்கிரகத்தின் தன்மையை ஆராயவும், ஆபத்தான விஷயங்களைச் செய்யவும் உதவும் பணியாளர் பணி. அவரின் உயிருக்கு அங்கே மதிப்பில்லை. காரணம், அவர் இறந்தாலும் மீண்டும் மீண்டும் 3டி பிரிண்டிங் முறையில் அவரைக் கொண்டுவந்துவிடுவார்கள். இப்படி மனிதப் பரிசோதனை எலி போல வாழும் அவருக்கு ஒவ்வொரு முறை இறக்கும்போதும், அவரது நினைவுகள் இறந்த இடத்திலிருந்து மீண்டும் புதிய உடலுக்குப் பதிவேற்றப்படுகின்றன.
இந்நிலையில், வேற்றுக்கிரக வாசிகளின் தாக்குதலில் மிக்கி 17 இறந்ததாகக் கருதப்பட்டு, 18-வது மிக்கி உருவாக்கப்படுகிறார். ஆனால், மிக்கி 17 உயிருடன் இருக்க, சிக்கல் தொடங்குகிறது. இதில் என்ன சிக்கல்? வேற்றுகிரகவாசிகள் ஏன் மிக்கியைக் கொல்லவில்லை? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே இந்த `மிக்கி 17' படத்தின் கதை.

மிக்கி 17, மிக்கி 18 என்ற இரு பதிப்புகளிலும் நடித்து அசத்தியுள்ளார் ராபர்ட் பேட்டின்சன். தீ நீருடன் சேர்ந்தது போல, ஒரு பாத்திரத்தில் சாந்தமான, சோகமான மனிதராகவும், மற்றொன்றில் ஆக்ரோஷமான, எதிர்ப்புக் காட்டும் கதாபாத்திரமாகவும் வேறுபடுத்தி மிரட்டியிருக்கிறார். திரையில் இரண்டு நபர்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு, சின்ன கண் சிமிட்டலில் கூட வித்தியாசம் காட்டிய நடிப்பு நம் கண்களை விரிய வைக்கிறது. அவல நகைச்சுவைகள் நிரம்பியிருக்கும் படத்தை, ஒரு சில நிமிட வசனக் கர்ஜனையில் சீரியஸ் மோடுக்கு அழைத்து வருகிறார் நவோமி அக்கி. இரு மிக்கிகளையும் அவர் ரசிக்கும் பார்வை வசீகரம்! இயக்குநர் பார்வையில் கொடுங்கோலர்கள் முட்டாள்களாக இருக்க, அந்த முட்டாள்தனத்திலும் வில்லனிசத்தை அனாயாசமாகச் செய்திருக்கிறார் மார்க் ருஃபாலோ. அவரின் ஜோடி ஜாடிக்கு ஏற்ற மூடியாக, சூனியமான நடிப்பைக் கொடுத்து, நம் வசவுகளை வாங்கும் அளவுக்குக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் டோனி கோலெட். இவர்கள் தவிர, திரையில் வந்த அனைவருமே தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
காலத்தைக் கடந்து சொல்லப்படும் கதைக்களம், அதை அம்சமாகக் காட்சிப்படுத்திய விதம் என ஒளிப்பதிவும் காலம் கடந்து நிற்கும் வகையில் இருக்கிறது. பிரின்டிங் இயந்திரம், விண்கலம், பனி படர்ந்த குகை, வெண்பனிச் சாரல் என அனைத்தும் விஷுவல் விருந்து. மேலும், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) தரமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பது, கற்பனை என்பதையே சில இடங்களில் மறக்க வைக்கின்றன. குறிப்பாக, நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் இடம் பயத்தைக் கொடுக்கிறது என்றால், பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோரணையில் இருக்கும் ஜீவராசியைக் கொஞ்சும் அளவுக்கு கியூட்டாக மாற்றி, "லவ் யூ" சொல்ல வைக்கிறது. அதேபோல படத்தின் உணர்வலைகளைத் திறம்பட உயர்த்தியிருக்கிறது பின்னணி இசை. அதிலும் இறுதி காட்சியின் எழுச்சி அட்டகாசம்!

இயக்குநர் பாங் ஜூன்-ஹோ, இந்தப் படத்திலும் முந்தைய படங்களான 'பாராசைட்', 'ஓக்ஜா' பாணியில் முதலாளித்துவத்தின் மீது கொட்டு வைத்திருக்கிறார். அதை சீரியஸாகச் சொல்லாமல், அவல நகைச்சுவை பாணியில் சமூக அநீதி, உழைப்புச் சுரண்டல், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு போன்ற கருப்பொருள்களைத் தொட்டுச் சிந்திக்க வைத்திருக்கிறார். மிக்கியின் உள்முரண்பாடுகளையும், அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் விதமாக வரும் வசனங்கள் ஆழமானவை. உதாரணமாக, பிரின்டிங் இயந்திரத்தைப் பற்றிய விவாதங்கள் மனித உயிரின் மதிப்பையே கேள்விக்கு உட்படுத்துகின்றன. அதே நேரத்தில், பல பக்க வசனங்களால் புரிய வைக்க வேண்டிய விஷயங்களை அனாயாசமாக சில காட்சிகளில் கடத்தியிருப்பது அவரின் மாஸ்டர் டச்!
படத்தின் திரைக்கதை மெதுவாகத் தொடங்கி, நடுவில் சுவாரஸ்யத்தை உயர்த்தி, முடிவில் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் டெம்ப்ளேட் செட்டப் என்றாலும், தனிமனித அடையாளம், மனிதநேயம், தொழில்நுட்பத்தின் தார்மீக எல்லைகள் குறித்து எழுப்பிய கேள்விகளின் வழியே புதுமையைக் தொடுகிறது. மிக்கி 17 மற்றும் 18 இடையேயான மோதல், அவர்களது சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவை திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்குகின்றன. படுக்கையறைக் காட்சியில் இரு மிக்கிகளின் வித்தியாசமான எதிர்வினைகள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தும் தியேட்டர் மொமென்ட்!
அதே சமயம், படத்தின் மெதுவான தொடக்கம் சற்றே சலிப்பை ஏற்படுத்தலாம். அதேபோல, மனித வலிகளை சில இடங்களில் 'Dank மீம்' போன்று எள்ளி நகையாடியது சின்ன அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஊதியம், வேலை, வீடு, வாகனம் என எல்லாவற்றிலும் எண்களைச் சுமந்து செல்லும் நம் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இறுதி ஃப்ரேம் மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

மொத்தத்தில், ஓர் அறிவியல் புனைவு கதையை நகைச்சுவைப் படமாகவும், சமூக விமர்சனமாகவும், சிறப்பான ஆக்கத்துடன் தந்திருக்கும் `மிக்கி 17', ரீமேக், சீக்குவல் எனச் சிக்குண்டிருக்கும் ஹாலிவுட்டில் ஒரு தேர்ந்த ஒரிஜினல் கலைப்படைப்பாகத் தனித்து மிளிர்கிறது.