Mumbai: வெளுத்து வாங்கும் கனமழை; சாலைகளை சூழ்ந்த வெள்ளம்... போக்குவரத்து பாதிப்பு!
மும்பையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த பருவமழை, நேற்று இரவு தொடங்கி இன்று வரை பெய்து கொண்டிருக்கிறது. காலையில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். கிங் சர்க்கிள், பரேல் போன்ற இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து வெகுவாக பாதித்துள்ளது. இதனால் மும்பை மாநகராட்சி பஸ்கள் ஆங்காங்கே அப்படியே நிற்கிறது. எனவே பயணிகள் கனமழையில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அந்தேரி சுரங்க பாதை சாலை முழுக்க மழை வெள்ளம் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அது போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.

அந்தேரி, குர்லா பகுதியில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் வாகனங்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் மத்திய ரயில்வே புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் பயணிகளுக்கு விடுத்துள்ள செய்தியில்,'' மும்பையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து மெதுவாக நடக்கிறது. எனவே விமானத்தில் பயணம் செய்ய இருப்பவர்கள் முன்கூட்டியே கிளம்பும்படியும், உங்களது விமானம் குறித்து எங்களது மொபைல் செயலில் தெரிந்து கொண்டு பயணத்தை திட்டமிடும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இதே போன்று ஸ்பைஸ்ஜெட் நிர்வாகமும், மும்பையில் கனமழை பெய்வதால் பயணிகள் விமானம் குறித்து மொபைல் செயலில் பார்த்து தெரிந்து கொண்டு பயணத்தை திட்டமிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை மற்றும் ராய்கட் பகுதியில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர மும்பை அருகில் உள்ள தானே, பால்கர் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் கடற்கரை பகுதிக்கு செல்லவேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. காலையில் இருந்து மும்பை கடலில் அலைகள் 3.88 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். கனமழையால் மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு பகுதியில் 50 மிமீ அளவுக்கு மழையும், மும்பை நகருக்குள் 24 மிமீ அளவுக்கு மழையும் பெய்துள்ளது. கொச்சியில் இருந்து மும்பை வந்த விமானம் விமான நிலையத்தின் ஓடுதளத்தை தொட்டவுடன் கனமழையால் அதன் மூன்று டயர்கள் வெடித்தது.

இதனால் விமானம் பைலட் கட்டுப்பாட்டை மீறி ஓடுதளத்தை விட்டு வெளியேறியது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தின் ஓடுதளமும் லேசாக சேதம் அடைந்தது. இதையடுத்து இரண்டாவது ஓடுதளம் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. விமானம் ஓடுதளத்தை விட்டு வெளியில் சென்றாலும் பயணிகள் மற்றும் விமானத்தின் சிப்பந்திகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தின் இஞ்சின் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு சோதனைக்காக விமானம், விமானங்களை நிறுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் தண்ணீர் மட்டும் 81 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.