"பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்...
Retro நாயகிகள் 13: அக்காவின் கனவு; ஸ்ரீகாந்த் மிரட்டல்; நயன்தாரா செஞ்சது - ஸ்ரீபிரியா பர்சனல்ஸ்
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, 'அவள் அப்படித்தான்'னு நிஜத்துலேயும் போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்லா தமிழ் சினிமாவுல வலம் வந்த ஸ்ரீபிரியா பத்திதான் இன்னிக்குத் தெரிஞ்சுக்கப்போறீங்க..!

ஸ்ரீபிரியாவோட சொந்தப் பேர் அலமேலு. சென்னை மைலாப்பூர்லதான் பிறந்து வளர்ந்திருக்காங்க. சர்ச் பார்க் கான்வென்ட்ல எட்டாவது வரைக்கும் படிச்சிருக்காங்க. அவர் பிறந்த வீடு ஒரு கம்ப்ளீட் சினிமா குடும்பம். அப்பா பக்கிரிசாமியும் அம்மா கிரிஜாவும் ஃபேமஸான டான்சர்ஸ். கிரிஜா சில படங்கள்ல நடனமும் ஆடியிருக்காங்க.
அடையாறு அரசு இசைக்கல்லூரியில இருக்கிற பரதநாட்டிய பிரிவுல பேராசிரியரா இருந்தவர் ஸ்ரீபிரியாவோட அப்பா. ஸ்ரீபிரியாவோட பெரியப்பா கே.என்.தண்டாயுதபாணிப் பிள்ளையும், அத்தை கே.ஜே. சரசாவும் புகழ்பெற்ற நடன குருவா (நட்டுவனார்) இருந்தவங்க.
ஸ்ரீபிரியாவுக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. அக்கா வைஜெயந்தியும் டான்சர். கே.பாலச்சந்தரோட அரங்கேற்றம் படத்துல ஹீரோயினோட தங்கைகள்ல ஒருத்தரா அறிமுகமானாங்க.
பின்னாள்ல, 'மனதில் உறுதி வேண்டும்' படத்துல சுஹாசினியோட கணவர் ரோல்ல நடிச்ச சந்திரகாந்த் ஸ்ரீபிரியாவோட தம்பி. இத்தன ஸ்ட்ராங்கான சினிமா பின்னணி இருந்தும், ஆரம்பத்துல நடிக்கணும்கிறதுல பெருசா ஆர்வமில்லாமதான் இருந்திருக்காங்க ஸ்ரீபிரியா. அப்புறம் எப்படி நடிக்க வந்தாங்க..?

ஒருமுறை ஸ்ரீபிரியாவோட அக்காவுக்கு மேக்கப் போட்டு, போட்டோ ஷூட் எடுத்துட்டு இருந்திருக்காங்க. அப்போ அங்க விளையாடிக்கிட்டிருந்த சிறுமி அலமேலுவுக்கும் (ஸ்ரீபிரியா) மேக்கப் போட்டு போட்டோ ஷூட் பண்ணியிருக்காங்க. அந்தப் புகைப்படங்கள் டைரக்டர் பி. மாதவன் கண்ணுலபட, 'மாணிக்கத்தொட்டில்' அப்படிங்கிற படத்துல ஜெமினி-கே.ஆர்.விஜயா ஜோடியோட குழந்தைகள்ல ஒருத்தரா நடிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு.
ஆனா, ஸ்ரீபிரியா 'நான் நடிச்சா ஹீரோயினாதான் நடிப்பேன்னு லைட்டா துடுக்குத்தனமா’ சொல்ல, வாய்ப்பு மிஸ்ஸாயிருக்கு. ஆனா, 1974-ல அவரோட அடுத்தப்படமான 'முருகன் காட்டிய வழி'யில ஏவிஎம் ராஜனோட தங்கச்சியா, நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியா தமிழ் சினிமாவுல அறிமுகமாகியிருக்காங்க. அப்போ தான் அவரோட சொந்தப் பேரான அலமேலுவை, அவங்க பெற்றோர் ஸ்ரீபிரியான்னு மாத்தி வெச்சிருக்காங்க.
இந்தப் படம் பத்தி பேட்டி ஒண்ணுல, ’’ஸ்ரீகாந்தோட பொண்ணு சர்ச் பார்க்ல என்னோட ஜூனியர். ஸ்ரீகாந்த் அவர் பொண்ணை ஸ்கூல்லவிட வர்றப்போ எல்லாம் அவரை நாங்க ‘ஏய் ஸ்ரீகாந்த்டி’ன்னு பயங்கரமா கலாட்டா பண்ணுவோம்.
முதல் படத்துல அவருக்கு ஜோடியா நான்தான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், ’நீதானே ஸ்கூலுக்கு வர்றப்போ எல்லாம் என்னைக் கிண்டல் பண்ண பொண்ணு; இரு என்னைக் கட்டிப்பிடிச்சு நடிக்கிறேன்னு ஸ்கூல்ல எல்லார்கிட்டயும் சொல்லிடுறேன்’னு ஜாலியா மிரட்டினார்’’னு ஃபன்னா ஷேர் பண்ணியிருக்காங்க.

முருகன் காட்டிய வழி படத்துல நடிக்கிறப்போவே 'அவள் ஒரு தொடர்கதை'யில சுஜாதாவோட தங்கையா நடிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அடுத்து பணத்துக்காக, பட்டிக்காட்டு ராஜா, தங்கத்திலே வைரம், பாட்டும் பரதமும், பாலூட்டி வளர்த்த கிளின்னு வரிசைகட்டி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு.
1977-ல சிவக்குமாருக்கு ஜோடியா இவங்க நடிச்ச ’ஆட்டுக்கார அலமேலு’ ஸ்ரீப்ரியாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்துச்சு. ’’என்னோட ஒரிஜினல் பெயர் அலமேலுங்கிறதால ’ஆட்டுக்கார அலமேலு’ல நான்தான் நடிக்கணும்னு சின்னப்ப தேவர் சொல்லிட்டார். ஆனா, மத்தவங்க, ’அது தங்கச்சி ரோல்ல நடிச்சப் பொண்ணாச்சே’ன்னு தடுத்திருக்காங்க.
அதையும் தாண்டிதான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சிது. முதல் நாள் ஷூட்டிங், முதல் ஷாட் எனக்குத்தான். ஒரே டேக்ல முடிச்சேன். அந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் அவரோட எந்தப் படத்துல நடிச்சாலும் படத்தோட முதல் ஷாட் எனக்குத்தான் வைப்பாரு.
என்கூட ரஜினியே நடிச்சாலும் முதல் ஷாட் பிரியா பொண்ணுக்குத்தான்’னு சொல்லிடுவார்’’னு மகிழ்ச்சியா ஷேர் பண்ணியிருக்காங்க அலமேலு என்கிற ஸ்ரீபிரியா.

இந்தப் படம் பயங்கர ஹிட். துணிச்சலான பொண்ணு கேரக்டர்ல ஸ்ரீபிரியாவும் அசத்தியிருப்பாங்க. இந்தப் படம் வெளியான 1977-ல மட்டும் ஸ்ரீபிரியா 16 படங்கள்ல நடிச்சிருக்காங்க.1978-ல 18 படங்கள்ல நடிச்சிருக்காங்க. 1979-ல 15 படங்கள்.
’’காலையில ரஜினிகூட ஷூட்டிங். மதியம் கமல்கூட ஷூட்டிங். இன்னொரு ஷூட்டிங்ல கமல், ரஜினி ரெண்டு பேர்கூடவும் நடிச்சிட்டிருப்பேன். என்னை அவங்களோட ஒரு படத்துல நடிக்க வெச்சாங்கன்னா, அடுத்தடுத்த படங்கள்லேயும் என்னைத்தான் புக் பண்ணுவாங்க.
ஏன்னா நான் யாருக்கும் தொல்லைக் கொடுக்காத ஆர்டிஸ்ட். நான் உண்டு; என் வேலை உண்டுன்னு இருப்பேன்.’’ - இத்தனைப் படங்கள்ல வாய்ப்புக்கிடைச்சதுக்குக் காரணமா நீங்க எதை நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு ஸ்ரீபிரியா சொன்ன பதில் இது.

சினி ஃபீல்டுல ஆரம்பிச்சு அவரோட ரசிகர்கள் வரைக்கும் ஸ்ரீபிரியா கிட்ட எல்லாருக்குமே பிடிச்ச விஷயம், அவங்களோட வெளிப்படைத்தன்மை. அது எந்தளவுக்குன்னு தெரிஞ்சா 2 கே கிட்ஸும் ஸ்ரீபிரியா ஃபேன் ஆகிடுவாங்க.
சி.ருத்ரைய்யா டைரக்ட் பண்ண ’அவள் அப்படித்தான்’ படம் பத்தி பேசுறப்போ, ’’அந்தப் படத்தோட கதையைக் கேட்டுட்டு நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த நேரத்துல என்னால அந்த அளவுக்குத்தான் யோசிக்க முடிஞ்சுது. ஆனா, கமல் சார்தான் எத்தனை நாள் மரத்தைச் சுத்தி ஹீரோ கூட டூயட் பாடிக்கிட்டிருப்பே.
இது ரொம்ப நல்ல ஸ்டோரி. இதைக் கட்டாயம் பண்ணு. உனக்கு நல்லப்பேர் கிடைக்கும்னு சொன்னார். அவர் சொன்னதாலதான் நடிச்சேன். அவர் சொன்ன மாதிரியே எனக்கு விருதும் கிடைச்சது. இன்னிக்கு வரைக்கும் என் கரியர்ல மிகச் சிறந்த படம் எதுன்னா, அது ’அவள் அப்படித்தான்’ படம்தான்.’’
எந்த அடிப்படையில படங்களை செலக்ட் பண்ணீங்க என்ற கேள்விக்கு ஸ்ரீபிரியா சொன்ன பதில், ‘’ஒரு படத்துல என்னை புக் பண்ண வந்தா என்னோட ரோல் எப்படி இருக்குனு மட்டும்தான் பார்ப்பேன். அது பிடிச்சிருந்தா ஓகே. முழுக்கதையையும் சொல்லுங்கன்னு கேக்க மாட்டேன். ஏன்னா பணம் போட்டு தயாரிக்கிறவங்களுக்கு நல்ல கதையை செலக்ட் பண்ண தெரியும்கிறது என்னோட கருத்து. அப்புறம் புது ஹீரோ, ஃபேமஸான ஹீரோன்னும் பார்க்க மாட்டேன். ’’
’’சிவாஜி சார்கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, அவர் 1960-கள்ல நடிச்ச படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்கூட நடிச்ச படங்கள் எல்லாம் அவ்ளோ நல்ல படங்கள்னு என்னால சொல்ல முடியாது.’’

ரஜினியோட பில்லா படத்துல ஸ்ரீபிரியா பண்ண கேரக்டர் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஆனா, அஜீத் நடிச்ச பில்லாவுல நயன்தாரா எப்பவும் கோவமா முகத்தை வெச்சிக்கிட்டு நடிச்சதுதான் அந்த கேரக்டருக்குச் சரியா இருந்துச்சுன்னு பேட்டி ஒண்ணுல சொல்லியிருக்காங்க ஸ்ரீபிரியா. இதுக்கு ஒரு மனசு வேணுமே.
’’ஸ்கூல் படிக்கிறப்போ நான் ஒரு டிராமாவுலகூட நடிச்சதில்ல. எனக்கு சினிமாவுல சான்ஸ் கிடைச்சப்போ, ‘உனக்கு இப்போ நேரம் நல்லா இருக்கு. நல்லா நடிச்சின்னா அது உனக்கு மரியாதைக் கொடுக்கும்’னு எங்கம்மா சொன்னாங்க. எனக்கு சினிமாவுல நடிக்க பெருசா ஆசையில்லதான். ஆனா, ஒரு விஷயம் எனக்குப் பிடிக்குதோ, பிடிக்கலையோ அதுக்குள்ள வந்துட்டேன்னா, என்னோட பெஸ்ட்டைக் கொடுத்திடுவேன். நான் ஒரு கமர்ஷியல் ஹீரோயின்னு எனக்குத் தெரியும். அதுல என்னால என்ன செய்ய முடியுமோ அத நான் செஞ்சேன்.

விருது வாங்குறதுக்கான முயற்சிகள்லாம் நான் எடுத்ததே இல்ல. ஆனா, எனக்கு ஒரு பெரிய விருது கிடைச்சிருக்கு. அத கொடுத்தவர் கலைஞர். அவரோட வசனங்களை எந்தெந்த நடிகைகள் தெளிவா உச்சரிப்பாங்கன்னு ஒரு நிகழ்ச்சியில அவர்கிட்ட கேட்டப்போ, அவர் என்னோட பேரையும் சொல்லியிருக்கார். எப்பேர்ப்பட்ட பெருமை இது’’ன்னு சொல்ற ஸ்ரீபிரியா, மாடி வீட்டு ஏழை, குலக்கொழுந்து ஆகிய படங்கள்ல கலைஞரோட வசனங்களைப் பேசி நடிச்சிருக்காங்க. நடிக்க வந்த புதுசுல தமிழ் படிக்க தெரியாம இருந்த ஸ்ரீபிரியா தான் பின்னாள்ல கலைஞர் வாயால பாராட்டப்பட்டிருக்காங்க.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு கிட்டத்தட்ட 350 படங்கள் நடிச்சிருக்கிற ஸ்ரீபிரியா, 1979-ல வெளிவந்த ’நீயா’, 1980-ல வெளிவந்த ‘நட்சத்திரம்’ படங்களைத் தயாரிச்சிருக்காங்க. இதுல நீயா பயங்கர ஹிட். கமல் நடிச்ச ‘பாபநாசம்’ படத்தோட தயாரிப்பாளர்கள்ல இவரும் ஒருத்தர்.
தவிர, சாந்தி முகூர்ந்தம், நானே வருவேன், எங்க ஊர் ஆட்டுக்காரன், மாலினி 22 பாளையங்கோட்டை, தெலுங்கு த்ரிஷ்யம் (2014) முதல் பாகத்தை டைரக்ஷன் செஞ்சிருக்காங்க ஸ்ரீபிரியா. சீரியலும் இயக்கியிருக்காங்க. இவங்க நடிச்ச ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் பெரிய ஹிட் ஆச்சு. ஸ்ரீபிரியா கதை எழுத்தாளரும்கூட. பின்னணிக்குரலும் கொடுத்திருக்காங்க. கொரோனா லாக் டவுன் நேரத்துல மொபைல் போன்லேயே யசோதா என்கிற குறும்படத்தை எடுத்தாங்க.

நடிகை லதாவின் சகோதரரும், நடிகருமான ராஜ்குமார் சேதுபதியை 1988-ம் வருடம் திருமணம் முடிச்ச ஸ்ரீபிரியாவுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இவர் ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் அம்பிகாவுடன் ’தேன் பூவே பூவே வா’ பாடல்ல நடிச்சவர்.
’’மனைவி தன்னைவிட உயரம் அதிகமா இருந்துட்டாலே ஒத்துக்காத ஆணாதிக்க உலகத்துல தன்னோட மனைவி அறிவாளி. மல்ட்டி டேலன்ட்டட்னு ஒத்துக்கிற மனிதர் அவர்’’னு கணவரைப் பத்தி குறிப்பிடுற ஸ்ரீபிரியா, ஆண் பெண் சமத்துவம் தொடர்பா, தொடர்ந்து பேசிட்டும், இயங்கிட்டும் இருக்கார்.
(நாயகிகள் வருவார்கள்)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...