World Tour: மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி; எத்தனை லட்சம் செலவில் தெரியுமா?
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளி (CMS), தனது மாணவர்களுக்கு உலக அளவிலான அனுபவத்தை வழங்குவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், சமூக ஊடக பயனர் ஒருவர் சிட்டி மாண்டிசோரி பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் ஆச்சரியத்துடன், "மாணவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் பள்ளி லக்னோவில் இருக்கிறதா?" என்று கேட்க, எங்கள் பள்ளி ஜெர்மனி அல்லது வியட்நாமுக்கும் அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறது என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர். இது அவரை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது.

"எங்கள் காலத்தில், எங்கள் பள்ளி எங்களை இந்தியா கேட் மட்டுமே அழைத்துச் செல்லும்" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.
பயணச் செலவு குறித்துக் கேட்டபோது, ஒரு மாணவருக்கு 3.5 லட்சம் ரூபாய் என்றும் பயணம் 10 நாட்கள் என்றும் தெரிவிக்கின்றனர். மொத்தம் 64 மாணவர்கள் இப்பயணத்தில் பங்கேற்றதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
பணம் செலுத்த முடிந்தவர்களும் இந்தப் பயணத்திற்கு வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். வீடியோவின் இறுதியில், "இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று புதிய கலாசாரங்களை அறிவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய பயணங்கள் மாணவர்களின் பொறுப்புணர்வை வளர்க்கின்றன" என்று குறிப்பிட்டார்.
இந்த வீடியோ 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து லக்னோவில் இருக்கும் சிட்டி மாண்டிசோரி பள்ளியின் (city montessori school) அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதாவது, ”ஒவ்வொரு ஆண்டும், CMS, மாணவர்களிடையே உலகளாவிய கண்ணோட்டங்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 20க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த முக்கிய சிறப்பம்சங்களில் மத பிரார்த்தனை, உலக அமைதி பிரார்த்தனை மற்றும் உலக பாராளுமன்றம் ஆகியவை அடங்கும். உலகளாவிய உரையாடல் மற்றும் அனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில் இவை தொகுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.