முன்பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: மதுரை ஆதீனம் பதிலளிக்க உத்தரவு
அஜித்குமார் வழக்கு : `சாப்பிட முடியல, கடைக்குகூட போக முடியவில்லை’ - புகார் கொடுத்த நிகிதா
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணை
மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. கடந்த ஜூன் 27 -ம் தேதியன்று நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றார்களா? நகையை எந்த இடத்தில் கழற்றினார்கள்? என்னென்ன வகையிலான நகைகள், நகைக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம்? அஜித்குமாரிடம் பேசியது குறித்தும்,
ஜூன் 27 ஆம் தேதி காலையில் கோயிலில் நடைபெற்ற சம்பவம், மாலையில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அஜித்குமாரை அழைத்து சென்றபோது நடந்த சம்பவம் குறித்தும், இரவில் திருப்புவனம் காவல்நிலையத்திலிருந்து வீடியோ எடுத்தது குறித்தும், நிகிதாவிற்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதற்குமேல் அழுவதற்கு கண்ணீர் இல்லை
6 மணி நேரம் விசாரணை முடிந்து புறப்பட்ட நிகிதா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நடந்த உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், அவர்கள் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு வருவேன்.
நான் வெறும் புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என தெரியாது. அஜித்குமார் இறந்தற்கு நான் வருத்தப்படுகிறேன், நான் தினந்தோறும் அழுதுகொண்டே உள்ளேன். சிபிஐ-யிடம் எல்லாமே சொல்லிவிட்டேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீர் இல்லை. வேதனையாக உள்ளது.
வேண்டும் என்றே சாகவேண்டும் என்று நினைப்போமா? நானும் வேதனையில் தான் உள்ளேன், சாப்பிட முடியவில்லை. காய்கறி வாங்க, பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்ல முடியவில்லை, ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது" என்றார்.