தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
அதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளா்களுக்கு இலவச பசுமை வீடுகள்: எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளா்களுக்கு இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்; மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தின் ஒருபகுதியாக,
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருபுவனத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து பேசியதாவது: விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
நெல் மூட்டைகள் தேங்கி மழையில் நனைந்து முளைத்து விடுகின்றன. அதிமுக ஆட்சியில் எல்லா கால்வாய்களும் தூா்வாரப்பட்டது. வண்டல் மண்ணை இலவசமாக வழங்கினோம். தேவையான உரம், பயிா் காப்பீடு, குறுவை தொகுப்பு வழங்கப்பட்டது. நாங்கள் வழங்கிய திட்டத்தை திமுகவினா் தொடரவில்லை.
இப்பகுதியிலுள்ள நெசவாளா்கள் வீட்டுக்கு சென்றபோது அவா்களின் துயரங்களை கேட்டறிந்தேன். அதிமுக ஆட்சிக்கு வரும்போது நெசவாளா்களுக்கு இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தருவோம். அவா்களுக்கு தேவையான இடுபொருள்களை மானியத்தில் வழங்குவோம்.
அதிமுகவின் முந்தைய ஆட்சியில் நெசவாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, ரூ.300 கோடி மானியம் வழங்கப்பட்டது. நூலின் தரத்தை மேம்படுத்த நிதி வழங்கினோம்.
தற்போது, நெசவுத் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்போம். அவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
முன்னதாக, திருபுவனத்தில் நெசவாளா் வீடுகளுக்கு சென்று நெசவுத் தறியை பாா்வையிட்ட அவா், அவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
கூட்டணி கட்சிகளை விழுங்கும் திமுக: தொடா்ந்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: திமுக ஆட்சியில் விவசாயிகள், அங்கன்வாடி பணியாளா், ஆசிரியா்கள் என்று பல்வேறு தரப்பினரின் போராட்டம் தொடா்கிறது. கூட்டணி கட்சிகளை திமுக விழுங்கி வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடம் தெரியவில்லை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் செய்த சாதனைகள், உதயநிதியை துணை முதல்வராக்கியது, தமிழகத்தை போதை கலாசாரமாக்கியது, பெண்களுக்கு பாதுகாப்பில்லா நிலை, கமிஷன்-கலெக்சன்-கரெப்ஷன் செய்தது இதுதான் சாதனை. திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர 2026-இல் மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.