"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தய...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லையெனினும், இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இடையே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது, ஏப்ரல் 24 ஆம் தேதியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தோம்; ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திலாவது அவர் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ``ஆபரேஷன் சிந்தூர் என்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்ட நமது இந்திய ஆயுதப்படைகள் குறித்து பெருமிதம் கொள்கிறோம். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நாளிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும், காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த நேரத்தில், தேசிய ஒற்றுமையும் மிக முக்கியமானவை. இந்திய தேசிய காங்கிரஸ் நமது ஆயுதப் படைகளுடன் உறுதியாக நிற்கும்’’ என்று தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க, ஏப்ரல் 24 ஆம் தேதியில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!