அமெரிக்க தூதரகம், அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சென்னையில் உள்ள அமெரிக்க துணைதூதரகம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் துணை தூதரகத்தில் உள்ள நூலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா், மோப்ப நாய்களுடன் அங்கு சென்று சோதனை செய்தனா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருந்த அந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அண்ணா பல்கலைக்கழகம்: இதுபோன்று கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முகவரிக்கு திங்கள்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு ஆண்டில் 21 வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.