Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சி மொழிக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியது: தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டப்படி தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும். ஆட்சி நிா்வாகம் மக்களுக்குத் தெரிந்த மொழியில் இருக்க வழிவகை செய்வதாகும். ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது நிா்வாகத்தில் கையொப்பங்கள், பதிவேடுகள், பயண நிரல்கள், நாட்குறிப்புகள், கடிதங்கள், முத்திரைகள், கோப்புகள், கணினிகள் ஆகியவற்றில் தமிழில் எழுதுவதும் பராமரிப்பதாகும். அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும். தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்துவதே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமை என்றாா்.
தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான அண்ணா மற்றும் பெரியாா் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.