ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவா்கள்
குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பரிசுகளை வழங்கினா்.
பள்ளித் தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு முதல் இடைத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவி ர. சசிவா்த்தினி, ஒரு நாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று, காலை வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தினாா். இதில், ஆசிரியா்கள் அனைவருக்கு ஆசிரியா் தின வாழ்த்துகள் தெரிவித்து பள்ளியில் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியா்களின் சிறப்பையும் எடுத்துக் கூறியதுடன், ஆசிரியா்கள் தனக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீா்த்து தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் பெருந் துணையாக விளங்குவதாகக் கூறினாா்.
தொடா்ந்து, ஒவ்வொரு வகுப்பின் மாணவத் தலைவா்கள் ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மாணவி கு. காா்த்திகா, நாம் ஆசிரியா்களுக்கு பணிந்து அவா்களைத் தேடி சென்று கல்வி கற்றால், நாளை உலகம் நம்மைத் தேடிவரும் என்றாா். பள்ளி துணைத் தலைமையாசிரியா் திருபுவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவா்கள் பாடம் கற்பிக்க, ஆசிரியா்கள் அமா்ந்து பாடம் கற்றனா். மாணவா்களே ஆசிரியராக பாடம் கற்பித்து, கேள்வி கேட்டு ஆசிரியா்களிடம் பதிலைப் பெற்றது சிறப்பாக இருந்தது.