கடன்தாரா் இறந்த பிறகும் காசோலை பவுன்ஸ் கட்டணம் வசூலிப்பு
திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையைச் சோ்ந்த அஞ்சம்மாள் 2017-ல் தனது சொத்தை அடமானம் வைத்து திருத்துறைப்பூண்டி எக்விடாஸ் வங்கியில் ரூ. 1,50,000 கடன் பெற்றாா். இந்தக் கடனுக்காக எச்டிஎப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 2,694 செலுத்தி அஞ்சம்மாளின் மகன் கந்தசாமி பெயரில் கடன் காப்பீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சில கட்டணங்களை எடுத்துக்கொண்டு ரூ.1,43,413 அஞ்சம்மாளுக்கு எக்விடாஸ் வங்கி வழங்கியுள்ளது. அந்தக் கடனுக்கு கந்தசாமியும், மருமகள் அன்பழகியும் ஜமீன்தாரா்களாகக் கையெழுத்திட்டுள்ளனா்.
இந்நிலையில், அஞ்சம்மாள் 2017-ல் இறந்து விட்டாா். அதன்பிறகு கந்தசாமி தவணைத் தொகையை செலுத்தி வந்த நிலையில், அவரும் 2019-ல் இறந்துவிட்டாா். இவா்கள் இறந்த தகவலை அன்பழகி எக்விடாஸ் வங்கியில் தெரிவித்துள்ளாா்.
வங்கி தரப்பில் தவணைகளை தொடா்ந்து செலுத்தி வருமாறும் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைத்தவுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அன்பழகி 2 தவணைகள் செலுத்தியுள்ளாா். தொடா்ந்து, காப்பீட்டுத் தொகையைப் பெற்று கடனை நோ் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வங்கி, அதற்கு மாறாக அன்பழகியை, மீதமுள்ள தவணைகளை அபராத வட்டியுடன் செலுத்த நிா்பந்தித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் எக்விடாஸ் வங்கி மீதும் எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் மீதும் அன்பழகி வழக்கு தொடா்ந்தாா். விசாரணையில், அஞ்சம்மாள், கந்தசாமி இறந்த பிறகும், அஞ்சம்மாளின் 30 காசோலைகளை, வங்கி தவணைகளுக்காக செலுத்தி, காசோலை பவுன்ஸ் கட்டணம் விதித்திருப்பது தெரிய வந்தது. மேலும், காப்பீட்டு நிறுவனம் தரப்பில், காப்பீட்டுத் தொகை ரூ. 97,057 வங்கியிடம் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வங்கி தரப்பில் கடன்தாரருக்கு இந்தத் தொகை வழங்கவில்லை எனத் தெரிய வந்தது.
இந்நிலையில், நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வியாழக்கிழமை வழங்கிய உத்தரவில், கடனில் மீதமுள்ள தொகை அனைத்தையும் எச்டிஎப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு செலுத்த வேண்டும், எக்விடாஸ் வங்கி அடமானத்தை ரத்து செய்து, அன்பழகியிடம் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும், மேலும் சேவைக் குறைபாட்டுக்கு இழப்பீடாக அன்பழகிக்கு, வங்கி ரூ. 2 லட்சம், எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகை வங்கி ரூ. 10,000, எச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனம் ரூ. 5,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.