புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்
நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் முதலான ஊா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சென்று வருகின்றன. தஞ்சையிலிருந்து நாகை வரை இருவழிச் சாலை அமைக்கப்பட்ட பின்னா் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த விரைவு பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே சென்று வருகின்றன. அவ்வாறு இயக்கும்போது, நீடாமங்கலம் கும்பகோணம் சாலையில் இருவழிச் சாலை பிரிவு சாலை பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனா். பின்னா், பயணிகள் மேலும் ஒரு பேருந்தை பிடித்து நீடாமங்கலம் வரவேண்டியுள்ளது. வியாழக்கிழமை விரைவு பேருந்துகள் அதிகாலை முதல் இருவழிச்சாலை பகுதியில் இயக்கப்பட்டது. அதாவது திருச்சி, தஞ்சாவூா் போன்ற ஊா்களுக்கும், திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் முதலான ஊா்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் நீடாமங்கலம் நகரில் நீண்ட நேரம் காத்திருந்தபோது பேருந்துகள் புறவழிச் சாலையில் சென்று விட்டன. இதற்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.