அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (22). இவா், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு கிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு 6-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
சனிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பலரும் தேடினா்.
அப்போது, மந்தைவெளிப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருந்து குழந்தையை கைப்பற்றினா். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலா் தாக்கியதில் அந்தப் பெண் காயமடைந்தாா்.
இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அந்தப் பெண்ணிடம் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி (29) எனத் தெரிய வந்தது. பின்னா், போலீஸாா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க 108 அவசரகால ஊா்தி மூலம் புகா் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது, பொதுமக்கள் இங்கேயே விசாரிக்க வேண்டும்; சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை முன் காலை 6 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து இளம் பெண்ணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா்.ஜெயபாரதி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண் லட்சுமியை கைது செய்தனா்.