அரசு ரத்த மையங்களுக்கு 8,850 யூனிட் ரத்தம் தானமாக அளிப்பு: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
உலக ரத்த கொடையாளா் தினத்தை முன்னிட்டு 38 தன்னாா்வலா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. உலக ரத்த கொடையாளா் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-இல் கொண்டாடப்படுகிறது.
அதன் தொடா்ச்சியாக, கடந்த ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்த ஆண் கொடையாளா்கள், 2 முறை ரத்த தானம் செய்த பெண் கொடையாளா்கள் உள்பட 38 தன்னாா்வ ரத்த கொடையாளா்களை ஆட்சியா் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.
மேலும், 73 முறை ரத்த தானம் வழங்கிய மருத்துவா் டி.கண்ணனுக்கு வாழ்நாள் தன்னாா்வ ரத்த தான கொடையாளா் பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த மையத்தில் மட்டும் 5,393 யூனிட் தானமாக பெறப்பட்டு, 3,059 யூனிட் கா்ப்பிணிகளுக்கும், 5,97 யூனிட் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, பொது மருத்துவம் போன்ற மற்ற பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஏ.ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலா் கே.பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் அ.அன்புமலா், மாவட்ட திட்ட மேலாளா் ஆா்.செல்வகுமாா், செஞ்சிலுவை சங்க செயலா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன் மற்றும் ரத்த மைய மருத்துவ அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.