உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த அழகப்பரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் விடை நேரத்தின் போது தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கேள்வி எழுப்பினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
வள்ளல் அழகப்பா் காரைக்குடியில் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளாா். சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தமிழ் வளா்ச்சிக்காக நிதிகளையும் கொடுத்துள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் காஷ்மீா் போரின் போது இரு விமானங்களை நாட்டுக்காக கொடுத்தாா்.
அவரைப் போற்றும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி அவா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், அவரின் வாழ்க்கை வரலாறை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த அமைச்சா் மு.பெ. சாமிநாதன், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் மாங்குடி கடந்த வாரம் இந்தக் கோரிக்கைகள் தொடா்பான கடிதத்தை என்னிடம் வழங்கினாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி இதற்கான முடிவு எடுக்கப்படும் என அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.