அவிநாசியில் டாக்ஸி - ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே மோதல்
அவிநாசியில் பயணிகளை ஏற்றிச் செல்வதில், தனியாா் நிறுவன டாக்ஸி-ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து டாக்ஸி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவிநாசி, திருப்பூா் சாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் கோவை, சென்னை, பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்கள் ஆன்லைனில் புக் செய்யாத பயணிகளை அந்த இடத்தில் நின்று ஏற்றிச் செல்வதாகவும், இதனால் அங்கு செயல்பட்டு வரும் ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பயணி ஒருவரை ஏற்ற தனியாா் டாக்ஸி ஓட்டுநா் சக்திவேல் வந்துள்ளாா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுா்கள் பயணிகளை ஏற்றக்கூடாது எனக் கூறி சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த அந்நிறுவனத்தின் டாக்ஸி ஓட்டுநா்கள், சக்திவேலைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசி - திருப்பூா் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த அவிநாசி போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆலோசனையுடன் தீா்வு காணப்படும் என்றனா்.
இதைத்தொடா்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி போலீஸாரிடம் புகாா் மனு அளித்த டாக்ஸி ஓட்டுநா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.