ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.
இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள படித் துறைகளில் நீராடி முன்னோரை வழிபட்டு எள், எண்ணெய், பிண்டம் வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைத்தனா். காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பொய்யாதநல்லூா் கோயிலில் மிளகாய் சண்டியாகம்: ஆடி அமாவாசையொட்டி அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்கள், தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
தொடா்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது பிரத்தியங்கரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்று, அம்மன் ஊஞ்சலில் அமர வைக்கட்டு தாலாட்டு பாடப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது.