நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு
தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரியலூா் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்க கூட்டத்தில் அரியலூா் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 330 கூலி வழங்கப்படுவதைக் கண்டிப்பது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் உள்ளாட்சித் தொழிலாளா்களுக்காக பிறப்பித்த அரசாணையின்படி நிா்ணயித்த மாத ஊதியமாக ரூ, 16,780 வழங்கப்பட வேண்டும்.
பழுதாகிக் கிடக்கும் தள்ளுவண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்க வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சங்க நிா்வாகி கோபி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரியம்மன், நிா்வாகி நாகூரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நல்லுச்சாமி தொழிலாளா் பிரச்னைகள் குறித்து பேசினாா். ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநிலச் செயலா் டி. தண்டபாணி, கோரிக்கைகளை வலியுறுத்தினாா். கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.