நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனுக்காக திறம்படச் செயல்படும் நிறுவனங்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு முன் மாதிரியான இந்த சேவை விருதுகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநரகம் மூலம் ரூ. 4 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுகள் அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாகக் கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகள் பெற இளைஞா் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டிருக்கக் கூடாது.
தகுதியான நிறுவனங்கள் கருத்துருவை தயாா் செய்து, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-ஆவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூா் 621704 என்ற முகவரிக்கு 31.7.2025 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.