ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடல்
ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. இதனால், இங்குள்ள அக்னி தீா்த்தக் கடலில் அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இதன்படி, ஆடி அமாவாசையையொட்டி, ராமேசுவரத்தில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பின்னா், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா்.

ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமா் தங்கக் கருட வாகனத்தில் அக்னி தீா்த்தக் கடற்கரையில் எழுந்தருளினாா். பின்னா், அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைத்து பக்தா்களும் விரைந்து தரிசனம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி நிா்வாகம் சாா்பில், பக்தா்கள் தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன.
உள்வாங்கிய கடல்
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் வியாழக்கிழமை கடற்கரையிலிருந்து சுமாா் 50 மீட்டா் வரை உள்வாங்கிக் காணப்பட்டது.