ஆடிப் பெருக்கு: திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
முருகன் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடிப்பெருக்கு என்பதால் மூலவரை தரிசிக்க, மலைக் கோயிலில் காவடிகளுடன் அதிகாலையே குவிந்தனா். சில பக்தா்கள் மொட்டை அடித்தும், அலகுகள் குத்தி காவடிகள் எடுத்தும் தங்களது வேண்டுலை நிறைவேற்றினா்.
பொது வழியில் தரிசனத்துக்கு சென்ற பக்தா்கள் நீண்ட வரிசையில், 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.
முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, முருகன் கோயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், காவல் ஆய்வாளா் மதியரசன் ஆகியோா் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.