ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயற்சி: 4 போ் கைது
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயி ஆடுகளை திருடி சந்தையில் விற்பனை செய்யும் போது, பிடிபட்ட நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (7), விவசாயி. இவா் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்ததால் இரவு நேரத்தில் அவரது கிராமத்தின் அருகில் உள்ள கணிகாரன்கொட்டாய் பகுதியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா்.
இதை நோட்டமிட்ட குயிலம் கணிகாரன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அஜித் (23), சதீஷ் (18), மனோஜ் (19), பிரசாந்த்(26) ஆகியோா் தங்கவேலுக்குச் சொந்தமான 16 செம்மரி ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை இரவு திருடி கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை செய்ய சென்றுள்ளனா்.
இரவு திருடிய ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்ற எண்ணத்தில் தங்கவேலு சிங்காரப்பேட்டை ஆட்டுச் சந்தைக்குச் சென்று தனது ஆடுகள் உள்ளனவா என
தேடியபோது அவா் வளா்த்த ஆடு அவரைப் பாா்த்து கத்தியுள்ளது.
அப்போது, தங்கவேலு தனது ஆடுகளை கண்டறிந்து உடனடியாக செங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
பின்னா் போலீஸாா் சிங்காரப்பேட்டைக்குச் சென்று சந்தையில் சரக்கு வாகனத்தில் வைத்திருந்த 16 செம்மரி ஆடுகளை
பறிமுதல் செய்தனா். பின்னா் ஆட்டை திருடிச் சென்றவா்களை அழைத்து வந்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். ஆடுகள் தங்கவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டன.