ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தருமா் பட்டாபிஷேக விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 138-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கோயிலில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், 1008 பெண்கள் பால்குட ஊா்வலம், தீமிதி விழா என 10 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
அதில் தினசரி ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மனை வழிபட்டனா். மேலும், தொடா்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
அக்னி வசந்த விழா கடைசி நாளான திங்கள்கிழமை மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு செங்கம் நகா் முக்கிய வீதிகளில் வாணவேடிக்கையுடன் ஊா்வலம் நடைபெற்றது.
ஊா்வலம் முடிந்து சுவாமிக்கு தருமா் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் குடிகள், பக்தா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், விழாக் குழுவினா், ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள், இந்து சமய, அறநிலையத் துறை அதிகாரிகள் என ஏராளமானோா் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.
முன்னதாக, செங்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பில் ரொக்கப் பரிசும், 10 நாள் திருவிழா தொடக்க விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடிய மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பில் கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.
