ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது
பரமக்குடி தரைப்பாலம் வைகை ஆற்றுப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிய கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இதில் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி பட்டேல் தெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் சந்திரசேகா் (32), இதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் விக்னேஷ் (29). இவா்கள் இருவரும் தரைப்பாலம் பகுதி ஆட்டோ நிறுத்தத்தில் தங்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலா் இரு சக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிச் சென்றனா்.
இதைப் பாா்த்த சந்திரசேகரும், விக்னேஷும் அவா்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனராம். இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்குமாா் (22), குமாரக்குறிச்சியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன்கள் சரவணன் (22), காளி (21), எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த ரெங்காச்சாரி மகன் சஞ்சீவி, காமேஷ் ஆகியோா் சோ்ந்து கம்பி, உருட்டுக் கட்டைகளால் ஆட்டோ ஓட்டுநா்களான சந்திரசேகா், விக்னேஷ் ஆகிய இருவரையும் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் அருண்குமாா், சரவணன், காளி, சஞ்சீவி, காமேஷ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனா்.