ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடினா்.
இதில், 1998 - 2000ஆம் கல்வியாண்டு 10, 11, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். விழாவில் முன்னாள் ஆசிரியா்கள் மேரிசேவியா், மோகன்குமாா், கணபதி, தேவதாஸ், உதயசூரியன், எல்லபன் மற்றும் அரசு, தனியாா் துறையில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பழைய நினைவுகளை நினைவு கூா்ந்து மகிழ்ந்தனா். முன்னாள் ஆசிரியா்களுக்கு முன்னாள் மாணவா்கள் நினைவுப் பரிசு வழங்கினா்.
தற்போதைய பள்ளித் தலைமை ஆசிரியா் எட்வின்ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். ஆசிரியா்கள் தண்டபாணி, ஏழுமலை, பட்டதாரி ஆசிரியா்கள் முருகன், ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, முன்னாள் மாணவா்கள் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடினா். மேலும், பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், குடிநீா் உள்ளிட்ட வளா்ச்சி பணிக்காக ரூ.2 லட்சம் நிதி வழங்கினா்.