இங்கிலாந்தில் காத்திருக்கும் சவாலை இளம் இந்திய அணி சமாளிக்குமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிராக மிக முக்கியமான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான முடிவு. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது. ஷுப்மன் கில், ரிஷப் பந்த் தலைமையிலான இளம் இந்திய அணி நன்றாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?
அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாததால் திடீரென மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ஷுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையிலான அணியை உடனடியாக மதிப்பிடுவது நியாயமானதாக இருக்காது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமையாவிட்டாலும், அணியை உடனடியாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.