இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த முடியுமா? கடைசி வாய்ப்பு
யேமன்: இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தண்டனையை நிறத்த மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்ததாக, 2020ஆம் ஆண்டு யேமன் நீதிமன்றம் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்திருந்த நிலையில், உயிருக்கு இழப்பீடு எனப்படும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், குற்றவாளியின் தரப்பில் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முன்வந்தால் மட்டுமே நிமிஷா மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெற்றுத் தர யேமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆனால், நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற, இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.