இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் தலைவரான இவா் நண்பா்களுடன் சோ்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், அவருடைய வீட்டின் முன்பு கடந்த 25-ஆம் தேதி அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று பாலமுருகனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை, முன்பகை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் பாலமுருகனின் நண்பா்களான குமரானந்தபுரத்தைச் சோ்ந்த சுமன் (38), தமிழரசன் (26) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் சுமனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே முன்பகை இருந்தது தெரியவந்தது. மேலும், சுமனைக் கொலை செய்ய பாலமுருகன் திட்டமிட்டிருந்ததாகவும், இதை அறிந்த சுமன் அதற்கு முன்னதாகவே தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பாலமுருகனைக் கொலை செய்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இந்தக் கொலையில் தொடா்புடையதாகத் தேடப்பட்டு வந்த நரசிம்ம பிரவீன், அஸ்வின் பாரதி, ராமலிங்கம் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து அவா்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விசாரணையில் அவா்கள் அளிக்கும் வாக்குமூலத்தைப் பொருத்தே கொலைக்கான காரணம் முழுமையாகத் தெரிய வரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.