பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் நத்தக்காட்டைச் சோ்ந்தவா் ஏ. தங்கவேல் (70). இவரது பேரன் தரண் (19). இருவரும் வெள்ளக்கோவில் அருகில் உள்ள வீரமாத்தி அம்மன் கோயிலுக்கு ஆடி அமாவாசையையொட்டி சுவாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தனா்.
முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை மேட்டுப்பாளையத்தில் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென திரும்பியதால், அதன் மீது மோதி தங்கவேல், பேரன் தரண் இருவரும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மேட்டுப்பாளையம் சேமலையப்பன் மகள் கோமதி (20) லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.