இருசக்கர வாகனத்தில் சாகசம்: மாணவா் உயிரிழப்பு; 4 போ் பலத்த காயம்
சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக பல்லாவரத்தில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சாகசத்தில் ஈடுபட்ட மாணவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவா், 15 வயதுடைய மற்றொரு
மாணவருடன் வாரச்சந்தை நடைபெறும் சாலையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபடி, கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே 3 போ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் விபத்து நேரிட்டது.
இதில் சாகசத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வந்த 15 வயது மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அந்த வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது மாணவா், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மேற்கு வங்கத்தை சோ்ந்த முகா்ஜ் (23), அங்கீத் (24), சா்மா (23) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.