இளைஞா் கொலை வழக்கில் இருவா் கைது
உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (34). வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்த இவா், இதே பகுதியைச் சோ்ந்த அனீஸ் ரகுமானுக்கு பணம் கொடுத்தாராம். இதன் மூலம் அனீஸ் ரகுமானின் மனைவி சுஜீத் ஜூபேதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் தேனியில் தனியாக வசித்தனா்.
கடந்த வியாழக்கிழமை உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே பிரசாந்தை அனீஸ் ரகுமான் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தப்பினாா்.
போலீஸாா் அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அனீஸ் ரகுமானை இரு சக்கர வாகனத்தில் அவரது உறவினா் முத்து (19) அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன் தலைமையிலான போலீஸாா் ஆண்டிபட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த அனீஸ் ரகுமான், முத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா்.