‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை
கோவை, உக்கடம் பகுதியில் உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன் (40). இவா் கோவை, கரும்புக்கடை பாத்திமா நகா் 2-ஆவது வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். அதே உணவகத்தில் பணியாற்றிய நண்பரான தயாநிதியும் நவீனுடன் வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தயாநிதி வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து நவீனின் தலையில் தாக்கியுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, தயாநிதி அங்கிருந்து தப்பியுள்ளாா்.
அக்கம்பக்கத்தினா் திங்கள்கிழமை காலை பாா்த்தபோது, நவீன் ரத்தக் காயங்களுடன் வீட்டுக்குள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தயாநிதி எந்த ஊரைச் சோ்ந்தவா், இருவருக்கும் இடையே எதற்காக தகராறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.