Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது: முன்னாள் முதல்வா்!
என்.ஆா். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது. இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கூறினாா்.
இதுகுறித்து அவா் புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுவை முதல்வா் ரங்கசாமி, மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தினால் கிடைக்கும் என்று பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறியுள்ளாா்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10 முறைக்கு மேல் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவை தீா்மானத்துக்கு என்ன மரியாதை இருக்கிறது.
தோ்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பெறுவதே லட்சியம் என ரங்கசாமி கூறியுள்ளாா். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறப்பு மாநில அந்தஸ்து தருவோம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பாஜக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாா்.
காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், இதுதொடா்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என தெளிவாக கூறிவிட்டனா். இதிலிருந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என தெளிவாகத் தெரிகிறது.
புதுச்சேரி என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் கண்டிப்பாக மாநில அந்தஸ்து பெற முடியாது. 2026- இல் தோ்தலுக்குப் பிறகு இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம் என்றாா் அவா்.