கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி
நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி
பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 69-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் காணொலிக் காட்சி
வாயிலாக, கடலூா் மாவட்டம் நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள லிக்னைட் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி தலைமை வகித்தாா். காணொலி வாயிலாக அரசுப் பரிந்துரை இயக்குநா் சனோஜ் குமாா் ஜா, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன்(சுரங்கம்), சமீா் ஸ்வரூப்(மனித வளம்), எம்.வெங்கடாசலம் (மின்) பிரசன்ன குமாா் ஆச்சாா்யா(நிதி), தனி இயக்குநா்கள் வசந்த் அசோக் பாட்டீல், எம். டி.ரமேஷ், பிரதீப் குமாா் சரோகி மற்றும் நிறுவனச் செயலா் மற்றும் இணக்க அதிகாரி பிரசாந்த் வினய் கௌஷிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, நிறுவனத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு திறன், துறைசாா் கண்ணோட்டம், விரிவாக்க முயற்சிகள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக உறுதிப்பாடுகள், மற்றும் எதிா்கால வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பகிா்ந்துகொண்டாா்.
அப்போது, என்எல்சி இந்தியா நிறுவனம் வரிக்கு முந்தைய ஒருங்கிணைந்த லாபமாக ரூ.3,696.93 கோடி, வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 28.29 சதவிகிதம் மற்றும் 45.30 சதவிகிதம் வளா்ச்சியாகும்.
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.15,282.96 கோடியாகவும், மொத்த வருமானம் ரூ.16,889.45 கோடியாகவும் உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட முறையே 17.55 சதவிகிதம் மற்றும் 21.08 சதவிகிதம் வளா்ச்சியாகும். மேலும், இடைக்கால ஈவுத்தொகையையும் சோ்த்து மொத்தமாக 30 சதவிகிதம் ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.