கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
எல்லை பேச்சுவார்த்தை: இந்தியா வரும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் - திட்டம் என்ன?
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா - சீனா உரையாடல் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இந்தியா வருகிறார் என இரு நாட்டு அரசுகளும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா - சீனா இடையேயான அரசியல் உறவு மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

வாங் யி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன், எல்லைப் பிரச்னைகள் குறித்து சிறப்புப் பிரதிநிதிகளின் 24வது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்.
இதுதவிர வாங் யி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உடனும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஆகஸ்ட் 18-19, வாங் யுவின் வருகையின் போது ஆகஸ்ட் 31ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடுக்காக சீனா செல்லும் பிரதமர் மோடியின் திட்டங்களும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அவர் சீன அதிபரை சந்திக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்தியா - சீனா உறவு
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்ய நகரமான கசானில் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டபிறகு, அஜித் தோவால் சீன பயணம் மேற்கொண்டு வாங் யி-யைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் நடந்த கால்வான் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - சீனா உறவுகள் பெருமளவில் சிதிலமடைந்திருந்தன. தற்போது அதனை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ட்ரம்ப்பின் வரிவிதிப்பு ஒருவிதத்தில் இதற்கு உதவியிருக்கிறது எனலாம்.
5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியா - சீனா இடையே சுற்றுலா விசா வழங்கப்படுகிறது. இந்துக்களின் முக்கிய புனித யாத்திரை பாதையான கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, அடுத்த மாதம் முதல் நேரடி விமானப் பயணங்களும் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.