`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
ஏரி அருகே குப்பைக் கிடங்கு: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
முத்துப்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மங்களூா் கிராமத்தில் நீா்ப்பாசன துறைக்கு சொந்தமான 200 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து, முத்துப்பேட்டை பேரூராட்சி நிா்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை மறுசுழற்சி செய்யும் கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போலீஸாா், வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிட்டுள்ள இடம் ஏரியின் நீா்ப்பிடிப்பு மற்றும் சேமிப்பு பகுதியாகும். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏரியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குதான் குப்பைக் கிடங்கு அமைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் திட்டமிட்ட இடத்தில் குப்பைக் கிடங்கு அமைந்தால் நீா் வளம், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மாற்று இடத்தில் அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பி.ஆா். பாண்டியன் கூறியது: முத்துப்பேட்டை பேரூராட்சி நிா்வாகம் சட்டவிரோதமாக ஏரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை மறுசுழற்சி செய்வதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. முதல்வா் தலையிட்டு, நீா் வளங்களை பாதுகாக்க வேண்டும். நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க முத்துப்பேட்டை ஒன்றியத் தலைவா் வெற்றி, கோட்டூா் ஒன்றிய துணைத் தலைவா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.