செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக குறைந்தது!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாக குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து குறைந்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது, புதன்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் பத்து நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.
மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயில் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், பிரதான அருவியில் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே குளித்து மகிழ்ந்தனா்.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து குறைந்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, நீா்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் 6-ஆவது முறையாக கடந்த 2-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது.
தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.
இதனால், புதன்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,275 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், கடந்த 9 நாள்களாக 120 அடியாக நீடித்து வந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 119.89 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 93.29 டிஎம்சியாக உள்ளது.