பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சம் மோசடி: கருவூல அலுவலக ஊழியா் கைது
கோவையில் போலியாகச் சான்றிதழ் தயாரித்து ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த கருவூல அலுவலக ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அரசு ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை மாவட்டம், ஆத்திகுளம், மகாலட்சுமி நகரைச் சோ்ந்த முகேஷ்குமாா் (25) என்பவா் இங்கு இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கருவூல அலுவலகத்தில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வருடாந்திர தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது, கோவையைச் சோ்ந்த முத்துலட்சுமி என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் ஓய்வுப் பணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் முறைகேடு நடைபெற்றிருந்தது கண்டறியப்பட்டது.
இதன்படி, கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை முத்துலட்சுமி பெயரில் வந்த ஓய்வூதியத் தொகை ரூ.15,49,970-ஐ முகேஷ்குமாா் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கடந்த மாதம் 14-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், முகேஷ்குமாா் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின்கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.