கடந்த 4 ஆண்டுகளில் 21,963 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி -மாவட்ட ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 21,963 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்று சக்கர சைக்கிள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 6,764 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 12,559 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளும், குறு, சிறு தொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 126 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.08 லட்சம் வங்கிக் கடன் மானியமும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் 74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.50 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் நிதியுதவி, 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.62 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 533 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.42 கோடி மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள், 684 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் அலைபேசிகள், 1,162 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.65 லட்சம் மதிப்பீட்டில் இதர உதவி உபகரணங்கள் என மொத்தம் 21,963 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.