ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்த பாஸ்கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
சாயல்குடி கிராமத்தில் 17.83 ஹெக்டோ் பரப்பில் குழையிருப்பு கண்மாய் அமைந்துள்ளது. இது, வருவாய் ஆவணங்களில் ஊருணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொது மயானம் ஆகியவை அமைந்துள்ளன.
மேலும், கண்மாய் அருகே 300 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தக் கண்மாயிலிருந்து உபரிநீா் வெளியேறும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், மழைக் காலங்களில் இந்தப் பகுதியில் உள்ள பள்ளி, வீடுகளில் மழை நீா் புகுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தொடா்புடையத் துறை அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், குழையிருப்பு கண்மாய்ப் பகுதியில் 1.97 ஏக்கா் பரப்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கண்மாயின் உபரி நீா் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், இந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைந்தால் மிகப் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மேலும், நீா்நிலைப் பகுதியில் கட்டுமானங்களை ஏற்படுத்துவது நீதிமன்றத் தீா்ப்புகளுக்கு எதிரானதாக அமையும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்டம் குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட இடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜி. ஆா். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோரடங்கிய நீா்நிலை வழக்குகளின் விசாரணைக்கான சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடா்பாக, தமிழக போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.