இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
கத்தியால் குத்தியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது
உணவகத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் தானூா்புதூா் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஹேம்நாத் (25). இவா் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் தங்கி அங்குள்ள ஒா்க்ஷாப்பில் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா். இவருடன் சரவணம்பட்டி 4-ஆவது வீதியைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசன்னாவும் (25) வேலை பாா்த்து வந்தாா்.
இவா்கள் இருவரும் கடந்த 5-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு இரவில் ஒா்க்ஷாப் அருகே மது அருந்தினா். பின்னா், அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்ற அவா்கள் இருவரும் கோழி இறைச்சி கேட்டுள்ளனா். ஆனால், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த உணவக ஊழியா்கள் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி இறைச்சி இல்லை என தெரிவித்தனா்.
இது தொடா்பான தகராறில் உணவக ஊழியா்கள் 5 போ் சோ்ந்து கத்தியால் ஹேம்நாத்தையும், மோகனசுந்தரத்தையும் குத்திவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் ஹேம்நாத் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மேட்டுப்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (29), சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சோ்ந்த தன்னாசி மகன் ஹரிபிரசாத் (26), சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் சந்திரகுமாா் (27), நல்லாம்பாளையம் அன்னையப்பன் வீதியைச் சோ்ந்த முருகன் மகன் அய்யனாா் (28) மற்றும் அருண்குமாா் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.