துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
கமுதி: வரதட்சணை கேட்டு நெருக்கடி; பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்; தீயிட்டு உயிரை மாய்த்த மருமகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது வீர மாச்சான்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த, கமுதி தெற்கு ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அண்ணாதுரை. இவரது மகன் முனீஸ்வரன் .
முனீஸ்வரனின் மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 12 வயதில் மகனும் 11 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதாவிடம் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியார் சூரம்மாள் ஆகியோர் வரதட்சணையாக பணம் மற்றும் நகைகள் கேட்டுத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

மேலும் ரஞ்சிதாவிடம் மாமனார் அண்ணாதுரை பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது கணவர் முனீஸ்வரனிடம், ரஞ்சிதா கூறியும் அவர் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மன உளைச்சலிலிருந்த ரஞ்சிதா, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனால் துடித்துப் போன ரஞ்சிதாவின் அலறலைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரஞ்சிதாவை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அதிக அளவு தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் ரஞ்சிதாவை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி ரஞ்சிதாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானம் செய்த போலீஸார் ரஞ்சிதாவின் உடலை ஒப்படைத்தனர்.

ரஞ்சிதா கொடுத்த மரண வாக்குமூலம் மற்றும் ரஞ்சிதாவின் தந்தை பச்சமால் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருநாழி காவல் நிலைய போலீஸார், ரஞ்சிதாவின் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான அண்ணாதுரை உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர். வரதட்சணை மற்றும் மாமனாரின் பாலியல் தொல்லையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.