'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல் சங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024 - 25ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 3,543 கரும்பு விவசாயிகளிடமிருந்து 2,28,050 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு அரைவை செய்யப்பட்டுள்ளது.
அரைவைக்கு கரும்பை உற்பத்தி செய்து வழங்கிய கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.349 வீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் ரூ.7. 95 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2025 - 26ஆம் ஆண்டில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப் பாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ.7,450-ம், அகலப்பாருடன் கூடிய ஒரு பரு விதைக் கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இதேபோல, கலைஞரின்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ், வல்லுநா் விதை கரும்பு, திசு வளா்ப்பு நாற்று நடவு, பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணை நடவு உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்து செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழங்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.