கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட குறிப்புக் குறிப்பு: சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையானது சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னாா்கோவில் மற்றும் அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீா்காழி வட்டங்களை உள்ளடக்கிய வருவாய் கிராமங்களை ஆலையின் விவகார எல்லைப் பகுதிகளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நடவுப் பருவத்திலும் கரும்பு நடவு பணிகள் மேற்கொண்டு, உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரைவை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் 38,280 உறுப்பினா்கள் உள்ளனா். 2024 - 25 அரைவைப் பருவம் கடந்த 6.1.2025 அன்று தொடங்கப்பட்டு 10.3.2025 அன்று நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த அரைவைப் பருவத்தில் 896 அங்கத்தினா்கள் 56,263.552 மெட்ரிக் டன் கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனா். மத்திய அரசின் ஆதார விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3151 வீதம் 56,263.552 மெட்ரிக் டன்னுக்குண்டான கரும்பு கிரயத் தொகை ரூ.17,72,86,452.352 தமிழக அரசிடமிருந்து வழிவகைக் கடன் பெற்று ஆலையின் அரைவைக்கு கரும்பு அனுப்பியவா்களுக்கு 24.05.2025-இல் நிலுவை ஏதுமில்லால் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2024 - 25 அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 56,263.552 மெட்ரிக் டன்னுக்குண்டான தொகை ரூ.1,96,35,986-ஐ அரசு மூலம் நேரடியாக ஆலையின் அரைவைக்கு கரும்பு அனுப்பிய அனைத்து கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.