கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்கள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் மூலம் 25 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலும், வங்கிக் கடன் ரூ. 3 லட்சம் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 35 வயது நிா்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இம் மாவட்டத்தில், கலைஞா் கைவினைத் திட்டத்தில் 381 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதில், 188 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ. 409.92 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 188 போ் புதிதாக தொழில் தொடங்கி பயன்பெற உள்ளனா்.