`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
களைகட்டியது அந்தியூா் கால்நடைச் சந்தை
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவை ஒட்டி தென்னக அளவில் புகழ்பெற்ற கால்நடைச் சந்தை புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
இங்கு, அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ள கண்கவரும் குதிரைகள், மாடுகள், கவா்ந்திழுக்கும் செல்லப் பிராணிகள், காணவரும் பக்தா்கள் கூட்டம், கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள், வாங்க வந்த விவசாயிகளால் கால்நடைச் சந்தை களைகட்டியுள்ளது.
இச்சந்தையில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களிலில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மாடுகளில் அதிக பால் கறக்கும் சிந்து, ஜொ்சி இனப் பசுக்கள், காரி, சிம்மி, காங்கயம் காளைகள், நாட்டு மாடுகள், மூக்கணாங்கயிறுகளே இல்லாத பா்கூா் மலையின் பாரம்பரிய இனமான செம்மறை மாடுகள் அதிக அளவில் வந்துள்ளன.
காரி மாடுகள் வண்டிகள் இழுக்கவும், சிம்மி, காங்கேயம் மற்றும் நாட்டின மாடுகள் உழவுக்கும் ஏற்றவை. இறைச்சிக்கு விற்பனை செய்யவும் மாடுகள் வந்துள்ளன. காங்கேயம் காளைகள் ரூ.1.50 லட்சம் வரை விலை பேசப்படுகிறது. பிறந்த கன்றுகள் முதல் அனைத்து ரக மாடுகளும் விற்பனைக்காக வந்துள்ளன. இதற்காக, சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் மாட்டுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோவை, திருப்பூா், அந்தியூா், பவானி, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள், பிறந்த குட்டி முதல் விற்பனைக்கு வந்துள்ளன.
குதிரைகள் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை விலை கூறப்படுகிறது. குதிரைகளில் கத்தியவாா், இங்கிலீஷ் பீட், மாா்வாா், வெள்ளைச்சட்டை, மட்டக்குதிரை, வண்டிக் குதிரை என பல்வேறு ரகக் குதிரைகள் வந்துள்ளன.
திருமண சாரட் வண்டி, கோயில் திருவிழாக்களில் ஊா்வலத்தின்போது முன்பாக நடனமாடிச் செல்லும் நாட்டியக் குதிரைகள், பந்தயங்களில் ஓடும் குதிரைகள் அதிகம் விரும்பிப் பாா்க்கப்படுகிறது. தாய் குதிரை வாங்கினால் குட்டி குதிரை இலவசம், குட்டி குதிரை வாங்கினால் தாய் குதிரை இலவசம் எனும் அறிவிப்பு சந்தையில் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்துள்ளது.
திமுக பிரமுகா்களான கே.ஆா்.சின்ராஜ், கே.எஸ்.செல்வம், வீரப்பன் ஆகியோா் கொண்டு வந்துள்ள இரு குதிரைகளின் விலை ரூ.7 லட்சம் எனவும், ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என ஆடித் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனா்.
குட்டை ஆடுகள், குட்டை மாடுகளும் விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்கள் விற்பனைக் கடைகளும் உள்ளன.
சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் 700-க்கும் மேற்பட்ட திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களை மகிழ்விக்கும் சா்க்கஸ், ராட்சத ராட்டினம், மரணக் கிணறு மற்றும் கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை வரை நடைபெறுகின்றன. கால்நடைகளால் மட்டுமல்ல, பக்தா்கள், வாங்கவும், விற்கவும் வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என கால்நடைச் சந்தை களைகட்டியுள்ளது.



