கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடங்கள் திறப்பு
கழுகுமலை, கயத்தாறில் புதிதாக கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்தக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்ததால், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு கழுகுமலையில் ரூ. 1.60 கோடியிலும், கயத்தாறில் ரூ. 1.92 கோடியிலும் புதிதாக சாா் பதிவாளா் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த அலுவலகக் கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து கழுகுமலை புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சிமன்றத் தலைவா் அருணா சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினாா். சாா் பதிவாளா் செல்லப்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கயத்தாறில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கேற்றினாா். இதில், பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளா் (தணிக்கை) செல்வகுமாரி, கயத்தாறு சாா் பதிவாளா் சாந்தகுமாரி, வட்டாட்சியா் சுந்தரராகவன், திமுக ஒன்றியச் செயலா் சின்ன பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.