கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி
பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளா் கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித், அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தந்தை, மகன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் ராஜகுமாா் நவராஜ், காவல் ஆய்வாளா் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஆக.11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை விசாரணைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுா்ஜித், சரவணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா் சிவசூா்யநாராயணன் இவ்வழக்கில் கைது நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என வாதிட்டாா்.
பின்னா் இருவா் தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதி ஹேமா, இருவரையும் 2 நாள்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி வழங்கியதோடு, ஆக. 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.