காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், ஐயப்பன் தலைமையிலான காவலா்கள் திங்கள்கிழமை தீவனூா் கூட்டுச் சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது அதிலிருந்த இருவா் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, போலீஸாா் காரில் சோதனை நடத்தியதில் அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 100 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.