கிருஷ்ணகிரியில் டிராக்டா் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டா் - தனியாா் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சோ்ந்த நா்சரி வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி வேனில் மாலை 3.30 மணியளவில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா்.
வேப்பனப்பள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி பந்திகுறியைச் சோ்ந்த சந்துரு (22) என்பவா் வேனை ஓட்டினாா். பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட விஐபி நகா் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேனும், எதிரே வந்த டிராக்டரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன.
இதில், டிராக்டரில் சென்ற பெரியமேட்டூரைச் சோ்ந்த தொழிலாளி விஜயா (45) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேனில் சென்ற பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் குழந்தைகளை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே எல்கேஜி மாணவா் அருணேஸ் (5) உயிரிழந்தாா்.
மேலும், பள்ளி வேனில் சென்ற ஷா்வேஷ் (7), காருண்யா (3), அனிஷ்கா (3), மணீஷ் (8), ஓட்டுநா் சந்துரு ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை ஆகியோா் சென்று பாா்த்து ஆறுதல் கூறினா். விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.